சனி, 5 மார்ச், 2011

கவிக்கோகிலம் "தம்பிலுவில் ஜெகா"


'தம்பிலுவில் ஜெகா" எனும் புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் திருமதி.ஜெகதீஸ்வரி நாதன். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபோது தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் கவிதையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், 50 வயதைக் கடந்தும் அதே இளமைத் துடிப்புடன் கவிதை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்.
     1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  'சிறுவர் மலர்", 'பூவும்பொட்டும்", 'வாலிப வட்டம்", 'ஒலிமஞ்சரி", 'இளைஞர் மன்றம்" போன்ற வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகள் இவரின் கவித்துவத்தைப் பறைசாற்றின.
         தினகரன்,வாரமஞ்சரி, வீரகேசரி,சிந்தாமணி போன்ற பத்திரிக்கைகளில் இவரது 50 ற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழாசிரியராக கடமையாற்றும் இவர் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பத்திரிகைப் பொறுப்பாசிரியராக இருந்து கமலம், முத்தாரம்,செந்தாமரை போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டார். 'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி,இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் ; சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
            பல கவியரங்குகளிலும் பங்குகொண்ட இவர் 'செங்கதிர்" சஞ்சிகையின் 2008 பங்குனி சர்வதேச மகளிர் சிறப்பிதழை அலங்கரித்தார். சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடுகளான 'கண்ணாடி முகங்கள்",'கவிதைகள் பேசட்டும்" போன்ற கவிதைத் தொகுப்புகளில் தனது கவிதைகளால் இரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துன்ளார்.
        1996.10.18 இல் திருக்கோயில் பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் இவரிக் கவித்துவத்திற்கு 1993.03.14 இல் கௌரவ ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் 'கவிக்கோகிலம்" எனும் விருதும் வழங்கப்பட்டது. 1998 இல் 'இன்னும் விடியவில்லை" எனும் கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் நூலாக வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக